“கூடுதலாக தொகுதிகளை கேட்க உள்ளோம்; கூட்டணியில் விரிசல் ஏற்படாது”- திருமாவளவன்
சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசிக சார்பில் "மதச்சார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி" பேரணி மகத்தான வெற்றி பெற்ற நிலையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், ""கள்" என்ற சொல்லுக்கு போதை என்றுதான் பொருள். கள் இறக்கும் தொழிலாளர்களுக்காக பேசுகிறேன் என போதை பொருளை ஊக்குவிப்பதை ஏற்க முடியாது. ஒரு தேசத்தின் வளர்ச்சியில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதைவிட மனிதவள ஆற்றலை வளப்படுத்துவதே சிறந்தது. மது மற்றும் போதை பொருட்கள் இந்தியாவில் முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே விசிகவின் நிலைப்பாடு. ஒரு தேசத்தின் இளைய தலைமுறை பாதிக்கப்படுவார்கள். அதனை தடுக்க வேண்டும். "கள்" உடல்நிலைக்கு நல்லதா என்பதை ஆராய வேண்டும். திமுகவை எதிர்க்க மட்டுமே பேசுகிறார்கள். மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை.
விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூடுதலாக தொகுதிகளை கேட்க உள்ளோம்.கூட்டணியில் கட்சிகள் கூடுதலாக தொகுதிகள் கேட்பது வழக்கமான ஒன்று தான். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்படாது. கூட்டணி விரிசல் ஏற்பட வேண்டும் என சிலர் எதிர்பார்க்கிறார்கள். அது நிறைவேறாது. புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வழக்கு விசாரணையில் உள்ளது. இதில் மேலும் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவரை கைது செய்ய எதற்காக 100 காவல் துறையினர் சென்றார்கள் என தெரியவில்லை. அந்த அணுகுமுறை சரியானது இல்லை" என்றார்.


