"பாமக எப்படியோ போகட்டும் என நான் நினைக்கவில்லை! தந்தைக்கு உள்ள அனுபவம், ஆளுமை..”- திருமாவளவன்
மதுரை மாவட்டம் மேலவளவில் சாதித் தீண்டாமை காரணமாக படுகொலை செய்யப்பட்ட ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேரின் 28வது நினைவு நாளில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அமித்ஷா மட்டும் தான் கூட்டணி ஆட்சி என பேசி வருகிறார், கூட்டணி ஆட்சி குறித்து ஈபிஎஸ் கூறியுள்ள கருத்து பாஜகவுக்கானது. பாஜக - அதிமுக கூட்டணியில் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை. அதிமுகவை எந்தக் கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். அவர்கள் கூடவே இருக்கும் கட்சிகளால் மட்டும்தான் விழுங்கி செரிக்கிற முயற்சியை மேற்கொள்ள முடியும். திருபுவனத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். எந்த காரணத்தை முன்னிட்டும் Custodial Death என்பது நிகழக்கூடாது. தொடர்ந்து சுட்டிக் காட்டுகிறோம், ஆனால் தொடர்கதையாக நீடிப்பது கவலை அளிக்கிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி காவல்துறை மரணங்கள் நிகழாதவாறு தமிழக அரசு உரிய நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.
ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன் என அன்புமணி கேட்கிறார். தந்தை மகன் இடையிலான இடைவெளி பெரிதாகி விடக் கூடாது என்கிற அடிப்படையில் சொல்லப்பட்ட பொறுப்பான வார்த்தை. தந்தைக்கு இருக்கும் அனுபவத்தையும், ஆளுமையையும் அன்புமணி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சொன்னனே தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை. எளிய மக்களுக்காக போராடுகிற கட்சி என நம்புவதால், அவர்களுக்கிடையிலான விரிசல் அதிகமாகிவிடக்கூடாது. அதனைப் பயன்படுத்தி பாசிச சக்திகள் உள்ளே நுழைய விடக்கூடாது. அந்தக் கட்சி எப்படியோ போகட்டும் என நான் நினைக்கவில்லை” என்றார்.


