”திமுக கூட்டணியை உடைக்க முயற்சி”- திருமாவளவன்
பெரும்பாலான தூய்மைப் பணியாளர்களை தனியார் மயமாக்கியது அதிமுக ஆட்சியில்தான் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்ப நடைமுறை. அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கம். சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியாருக்கு கொடுத்தது அதிமுக ஆட்சி. அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்? இன்னும் 4 மண்டலங்கள் உள்ளன. அதில் 2 மண்டலங்களை தனியார் மயமாக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும். தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
தூய்மை பணியாளர்களின் பிரச்சனையில் ஆரம்பத்தில் இருந்தே விசிக குரல் கொடுத்து வருகிறது. தூய்மை பணிகளை தனியார் மயமாகும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்.தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையை பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க முயற்சிக்கின்றனர். ஜிஎஸ்டி சீர்திருத்த அறிவிப்பு மகிழ்ச்சி, எங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரியை முழுமையாக கைவிட வேண்டும். தேர்தலுக்காக செய்தாலும் மக்களுக்கு பயன்தரும் என்பதால் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம். சுதந்திர தின விழாவில் RSSஐ பிரதமர் பாராட்டியது ஏற்புடையதல்ல” என்றார்.


