ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

 
supreme court

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையில் அடிக்கடி ஏற்பட்ட விபத்துகள், ஆலையிலிருந்து அடிக்கடி வெளியேறும் நச்சு வாயுக்கசிவு ஆகியவற்றால் தூத்துக்குடி பகுதியில் வாழும் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஓங்கி ஒலிக்கத்தொடங்கின. அக்கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி பகுதியில் உள்ள மக்கள் நடத்தி வந்த அறவழிப் போராட்டம் கடந்த 22.05.2018 ஆம் நாள் நூறாவது நாளை எட்டியதைத் தொடர்ந்து, அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து தான் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மே 23 ஆம் தேதி முதல் தற்காலிகமாகவும், மே 29 ஆம் தேதி முதல் நிரந்தரமாகவும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. அதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான மேல்முறையீட்டு மனு தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. 

sterlite copper

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் ஆதரவாளர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.   வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை விசாரிக்கும் போது இடையீட்டு மனுவையும் இணைத்து விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.