போக்குவரத்து காவல்துறையில் “வீரா” மீட்பு வாகனத்தின் பயன்பாடு தொடக்கம்!!

 
tn

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையில் “வீரா” மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (8.9.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான “வீரா” (VEERA Vehicle for Extrication in Emergency Rescue and Accidents) அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்து, காவல்துறையினரின் செயல்முறை விளக்கத்தை பார்வையிட்டார்.

tn

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறையானது சாலை விபத்துகளைக் குறைப்பதிலும், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உயிரைக் காப்பதிலும் முன்னோடியாக விளங்கி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான “இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48” திட்டத்தை தொடங்கி வைத்து, சாலை விபத்துகளில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நமது சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் திட்டத்தின் ஒரு அங்கமாக, சாலை விபத்துக்களில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களின் உயிரைக் காப்பதற்கு, ஒரு தனித்துவமான மற்றும் முன்னோடியான முயற்சியாக மீட்பு வாகனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது இந்தியாவிலேயே முதல்முறையாக திட்டமிடப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டமானது, சாலை விபத்தில் சிக்கிய / சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் பாதிக்கப்பட்ட நபர்களை, தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற காவல் குழுவினர் உதவியுடன் மீட்பதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும்.

tn

இந்த வாகனத்திற்கு “வீரா” (VEERA Vehicle for Extrication in Emergency Rescue and Accidents அவசரகால மீட்பு மற்றும் விபத்துக்களிலிருந்து மீட்கும் வாகனம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது ஹூண்டாய் குளோவிஸ் மற்றும் இசுசூ மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டமாகும். மேலும், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை மற்றும் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இந்தத் திட்டத்திற்கு தங்களது நிபுணத்துவம் மற்றும் பங்களிப்பை அளித்துள்ளன.