தமிழறிஞர் மு.வரதராசனார் திருவுருவச் சிலையுடன் கூடிய குவிமாட அரங்கம் திறப்பு

 
tn

தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் திருவுருவச் சிலையுடன் கூடிய குவிமாட அரங்கம், தியாகி அண்ணல் தங்கோ திருவுருவச் சிலை, இரட்டைமலை சீனிவாசன் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம் மற்றும் திரு.எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் புதிய சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ரூ.7.85 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் திருவுருவச் சிலையுடன் கூடிய குவிமாட அரங்கம், தியாகி அண்ணல் தங்கோ திருவுருவச் சிலை, இரட்டைமலை சீனிவாசன் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம் மற்றும் திரு.எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் குதிரையில் அமர்ந்து போர்புரிவது போன்று கம்பீர தோற்றத்துடன் கூடிய புதிய சிலை - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

tn

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 27.2.2024 அன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 7 கோடியே 85 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய குவிமாட அரங்கம், தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்கு திருவுருவச் சிலை, இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம் மற்றும் திரு.எம்.கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் குதிரையில் அமர்ந்து போர்புரிவது போன்று கம்பீர தோற்றத்துடன் கூடிய புதிய சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.


தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய குவிமாட அரங்கம்

2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில், இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களில் ஒருவரும், பல்வேறு இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், புதினங்கள் மற்றும் மற்றும் சிறுகதைகள் ஆகியவற்றைத் தமிழில் படைத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றிய பன்முக ஆற்றல் கொண்ட தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்டத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இராணிப்பேட்டை நகரத்தில் 65 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் திருவுருவச் சிலையுடன் கூடிய குவிமாட அரங்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.


தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்கு திருவுருவச் சிலை

tn


2023-24ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டு, வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியும், கள்ளுக்கடை மறியல், வைக்கம், சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாகிரகம் மற்றும் நீல் சிலை சத்தியாகிரகம் ஆகிய பேராட்டங்களில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்று மடிந்த அண்ணல் தங்கோ அவர்களுக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வேலூர் மாவட்டம், குடியாத்தம், மேல்ஆத்தூர் சாலை அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நேரு பூங்காவில் 50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தியாகி அண்ணல் தங்கோ திருவுருவச் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம்
இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் இனப் போராளியாகவும், வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். தன் இன மக்கள் அனுபவிக்கும் வேதனைகளிலிருந்து அவர்களை விடுவிக்க பாடுபடுவதை தன்னுடைய வாழ்நாள் இலட்சியம் எனத் தீர்மானித்துத் தொண்டாற்றினார். இவர் 1891-ஆம் ஆண்டு "பறையர் மகாஜன சபை" என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார். பின்னர் இந்த அமைப்பு "ஆதிதிராவிட மகாஜன சபை" என்று அழைக்கப்பட்டது. இச்சபை மூலம் ஆதிதிராவிட மக்கள் சமுதாய முன்னேற்றம் அடைய பாடுபட்டார். பின்னர் 1893-ஆம் ஆண்டு "பறையன்" என்ற பத்திரிகையைத் தொடங்கினார். ஆதிதிராவிட இன முன்னேற்றத்திற்காக இப்பத்திரிகையில் தொடர்ந்து எழுச்சியூட்டக் கூடிய கட்டுரைகளை எழுதினார். 1923-ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவருக்கு ராவ்சாகிப், திவான்பகதூர், திராவிடமணி போன்ற பட்டங்கள் அளிக்கப்பட்டன.

அண்ணல் காந்தியடிகளுக்கு மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து போடுவதற்குக் காரணமாக இருந்தவர் இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் தான். இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1930-ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் சார்பில் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் கலந்து கொண்டார். அண்ணல் காந்தியடிகளால் தொடங்கப்பட்ட தீண்டத் தகாதோர் ஊழியர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.1939ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பைத் தொடங்கினார். தன்னுடைய வாழ்க்கையைத் ஆதி திராவிட மக்களுக்காக அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1945ஆம் ஆண்டு தன்னுடைய 85-வது வயதில் உயிரிழந்தார்.

ஆதிதிராவிட மக்கள் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கத்தில் 2 கோடியே 17 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையுடன் கூடிய இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.