ஏ.டி.எம் கொள்ளை எதிரொலி - திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை

 
car checking

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 ஏடிஎம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக போலீசார் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங் ஏடிஎம் மையத்திற்குள் நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மெஷின் மூலம், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதேபோல் தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் அதே மர்மநபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை திருடி சென்றுள்ளனர்.

sbi

இதேபோல் தொடர்ந்து போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நேரத்தில் நான்கு ஏடிஎம் இயந்திரத்தை  மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரடியாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளைபோன நான்கு ஏடிஎம் இயந்திரங்களில் மூன்று எஸ்பிஐ வங்கி ஏடிஎம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

கொள்ளை சம்பவம் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையின் முக்கிய பகுதிகள், டோல்கேட் பகுதிகளில் போலீசார் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடந்த பகுதி, மாவட்ட எல்லைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.