கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி புதிய மேம்பாலம்

 
rain

வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், வேள்ச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும்  தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும்  பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் தண்ணீர் சாலையை சூழ்ந்தது. வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையை வெள்ளம் சூழ்ந்தது. 

flood

சாலையில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், வேளச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், வேள்ச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக வேளச்சேரி புதிய மேம்பாலம் கார் பார்க்கிங்காக காட்சி அளித்து வருகிறது.  மேம்பாலத்தின் ஒருபுறம் கார்கள், மறுபுறம் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காணொலிகள் வெளியாகி வருகின்றனர். இந்த நிலையில், பாதுகாப்பு கருத்தி மக்கள் தங்களது கார்களை மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்.