‘முந்திரிக்கொட்டை’... அமைச்சர் சேகர்பாபு என்னை ஒருமையில் பேசினார்- வேல்முருகன் பரபரப்பு குற்றாச்சாட்டு

 
வேல்முருகன் வேல்முருகன்

அமைச்சர் சேகர்பாபு அதிமுகவை காப்பாற்றுவதற்காக என்னை விமர்சித்தார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டியளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நடந்தது குறித்து விளக்கம் அளித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், “தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என் நோக்கம் தகராறு செய்வது இல்லை. அமைச்சர் சேகர்பாபு என்னை ஒருமையில் பேசினார். நான் அப்படி என்னிடம் பேசக்கூடாது எனக் கூறினேன். அமைச்சர் சேகர்பாபு அதிமுக-வை காப்பாற்றுவதற்காக என்னை விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் ‘இந்திய நாட்டை சேர்ந்த யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டின் அனைத்து அரசுத்தேர்வையும் எழுதலாம்' என்றனர். அந்த நிலை என்னால்தான் உடைக்கப்பட்டது. இதில் அதிமுகவை இன்று அவையில் நான் தோலுரித்து காட்ட முயன்றேன். கடந்த காலத்தில் ‘அதிமுக-வில் இருந்துவிட்டு இப்போது திமுக-வில் இருக்கும்', ‘அதிமுக அமைச்சர்களோடு நெருக்கமாக இருக்கும்’ சேகர் பாபுவால் அதை ஏற்க முடியவில்லை. 

நான் பேச வந்ததை முழுமையாக கேட்காமல் பாதியில் நிறுத்திவிட்டார்கள். நாடாளுமன்றத்தில் கேட்பது போல் நானும், சபாநாயகர் முன் நின்று கேட்டேன். தாய்மொழி குறித்து பேசினால் அமைச்சர் சேகர்பாபுவுக்கு என்ன பிரச்சனை? நான் என்ன சொல்ல வருகிறேன் என புரியாமல் அதிமுக- திமுக உறுப்பினர்கள் எல்லோரும் கத்தினார்கள். சட்டப்பேரவையில் சேகர்பாபு என்னை முந்திரிக்கொட்டை எனக் கூறினார். சேகர்பாபு சொன்ன அதே வார்த்தை முதல்வரும் சொன்னது வருத்தம் அளிக்கிறது” என்றார்.