எதிர்காலத்தில் இப்படியான ரோடு ஷோகளை தடை செய்ய வேண்டும் - வேல்முருகன்..!
Sep 28, 2025, 15:12 IST1759052578972
தவாக தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைபெற்ற, நடிகர் விஜய்யின் பரப்புரை நிகழ்ச்சி, ஒரு பேரதிர்ச்சியையும் பேராபத்தையும் உருவாக்கியுள்ளது. கூட்ட நெரிசலால் குழந்தைகளும் சிறுவர்களும் உட்பட 40 பேர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்ததும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்கள் என்ற செய்திகளும், நம் அனைவரின் உள்ளத்தையும் உருக்குகின்றன.
நாட்டையே உலுக்கி இருக்கிற இந்த துயரச் சம்பவத்துக்கு விஜய் தான் காரணம். ஒரு மனிதனின் உயிர் வாக்குகளை விட மேலானது என்பதை, அரசியல் களத்தில் சிலர் மறந்துவிட்டனர் என்பது வேதனையளிக்கிறது. வாழும் தலைமுறை குறித்தும், அவர்களின் உயிர் பாதுகாப்புக் குறித்தும், அக்கரை கொள்ளாத ஒருவர், எதிர்காலத் தலைமுறைக்கும், எந்த நன்மையும் செய்துவிட முடியாது என்பதே உண்மை. உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சிந்தியக் கண்ணீரும், மரண ஓலங்களும், அழுகுரல்களும், நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிகமான மன வலியையும், வேதனையையும் தந்திருக்கிறது.
இத்தகைய ரோடு ஷோ பரப்புரைகள், அரசியல் ஆடம்பரத்துக்காக நடத்தப்படலாம். ஆனால், அதற்காகப் பொதுமக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. மக்களின் உயிரைப் பறிக்கும் சினிமாத்தனமான அரசியலை, எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது . தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இதை வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு, அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், உயர்நீதிமன்றம் உடனடியாக இதில் தலையிட்டு வழக்குப்பதிந்து, சுயாதீனமான விசாரணையை மேற்கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீதும், பிரசாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் நடைபெறும் அரசியல் கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும், தகுந்தப் பாதுகாப்புகளோடு, உயிராபத்து ஏற்படாத வண்ணம் நடைபெறுவதற்கான, நல்லதொரு ஆலோசனைகளைத் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும், வழங்கிட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இப்படியான ரோடு ஷோ, பிரசாரங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தமிழக அரசு, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரண நிதி மற்றும் உதவி வழங்கப்பட வேண்டும் என்றும், காயமடைந்தோருக்குச் சிறப்பு மருத்துவக் குழு மூலம் விரைவான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, எமது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தச் சகோதர சகோதரிகள் விரைவில் நலம் பெறவும், உளமார வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


