என்எல்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக மக்களை திரட்டி போராடுவேன்- வேல்முருகன் ஆவேசம்

 
s s

என்.எல்.சிக்கு ஆதரவாக செயல்பட்டால் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எதிராக மக்களை திரட்டி போராடுவேன் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூலம் வானதிராயபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமத்தில் என்எல்சி நிர்வாகம் வீடு நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்க உள்ளனர் அதனை கண்டித்து இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி கிராம பெண்கள், ஆண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில்  காற்றை, நீரை மாசுபடுத்தி மனித வளத்தை கொல்லும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மீது விசாரணை நடத்த கோரியும், வளர்ச்சியின் பெயரால் பூர்வகுடிகளை சொந்த மண்ணிலே அகதியாக்கி அழிக்கும் முடிவை கைவிடக்கோரியும், என்எல்சியால் பாதிக்கப்படும் கிராம எல்லைக்கான பத்திரப்பதிவு  முடக்கத்தை உடனே ரத்து செய்ய கோரியும், ஏற்கனவே எடுத்த நிலத்திற்கு 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் தலைமையில் தென்குத்து கிராமத்தில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “என்.எல்.சி நிறுவனம் வாணதிராயபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட தென்குத்து பகுதி மக்களை காவல்துறை, வருவாய் துறை வைத்து கொண்டு மிரட்டி அடாவடியாக அவர்கள் வீடுகளை இடித்து, விவசாயி  நிலங்களை அழித்து நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலம் சுமார் 15,000 ஏக்கர் என்எல்சி நிறுவனத்திடம் மீதமாக இருக்கிறது. அதில்  கரி வெட்டுவதற்கு பதிலாக  நிலத்தை தர மறுக்கின்ற மக்களை மீது வழக்கு போடுவதோ இளைஞர்களை மிரட்டுவதோ  காவல்துறை வைத்து மிரட்டுவதோ சிஎஸ்எப் கிராமத்தில் அணிவகுப்பு நடத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. வடக்கு வெள்ளூர், கங்கைகொண்டான், அம்மேரி போன்ற பஞ்சாயத்து உட்பட்ட கிராம மக்களையும் இதே பாணியில் கையாளுவது கங்கைகொண்டான் பகுதியில் ஆண்டாண்டு காலமாக வாழ்கின்ற மக்களை அப்புறப்படுத்திகின்றனர். இதையெல்லாம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டிக்கிறது, தமிழக சட்டசபையில் பேசியுள்ளோம்.

ஏற்கனவே எடுத்த நிலங்களில் உள்ள நிலகரியை எடுத்தாலே 2040 வரை எடுக்கலாம் இதற்கு மேல் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, பாதிக்கப்பட்ட மக்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் இதில் இடைத்தரகர்கள் குறுக்கே இருக்கக் கூடாது, என்எல்சியால் பாதிக்கப்படும் கிராம எல்லைக்கான பத்திரப்பதிவு முடக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என்எல்சி நிறுவனம் இப்பொகுதியில் உள்ள குடிநீர் தொட்டி, சாலை, மின்சாரத்தை துண்டிப்பதை நிறுத்த வேண்டும், நிலம் கொடுத்த மக்களுக்கு முறையான இழப்பீடு தொகை மற்றும் குடும்பத்திற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்குவோம் என்று கூறினார்கள். இதுவரை என்எல்சி நிறுவனம்  செய்யவில்லை உடனடியாக வழங்க வேண்டும். என்எல்சி நிறுவனம் மீறி இப்பகுதியில் நிலங்களை கையகப்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு சக்திகள் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைந்து பெரிய போராட்டம் நடத்துவோம். என்எல்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எதிராக மக்களை திரட்டி போராடுவேன்” என்றார்.