"நீங்கள் போடும் தீர்மானம் குப்பைக்கு தான் போகும்"- வேல்முருகன் ஆவேசம்
ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் தமிழ்நாடு அரசின் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ஆக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான தரவுகளைத் தமிழ்நாடு அரசே திரட்டவேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய எம்.எல்.ஏ. வேல்முருகன், “சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே எழுதிய கடிதத்துக்கு தற்போதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. மத்திய அரசு சமூக நீதிக் கோட்பாட்டுக்கு எதிரானது. அவர்களிடத்தில் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், சமூக நீதி, இனப்படுகொலை, முல்லை பெரியாறு, நீட் ஆகிய தீர்மானங்களை குப்பை தொட்டியில் வீசிய மத்திய அரசுக்கு இதை அனுப்பி வைத்தால், இதையும் குப்பை தொட்டிக்கே அனுப்புவர்.
வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 10.5 % இட ஒதுக்கீடு செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு தரவுகள் மட்டுமே உச்சநீதிமன்றம் கேட்டது, உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லை.. இதை மாநில அரசே செய்யலாம். முதல்வரின் முன்னுரையை ஏற்கிறேன். தீர்மானத்தில் ஒரு சிறிய திருத்தம் செய்யுங்கள். 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு அரசியல் அழுத்தம் தருவோம் என்றும், அப்படி இல்லாவிட்டால் தமிழ்நாடு அரசு உள் ஒதுக்கீடு தொடர்பான விவரங்களை சேகரிப்போம் என்ற உத்தரவை முதல்வர் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்
நான் சாதி ரீதியான கட்சியைத் தொடங்கவில்லை... சாதிய வட்டத்துக்குள் என்னை கொண்டுவர வேண்டாம். ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் தமிழ்நாடு அரசின் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான தரவுகளைத் தமிழ்நாடு அரசே திரட்டவேண்டும்” என்றார்.