டெல்டா மாவட்டங்களுக்கு 'மிக கனமழை' எச்சரிக்கை! சென்னைக்கு 490 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது சற்றே வலுவிழந்து 'காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக' மாறியுள்ளது. இது தற்போது சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் பயணித்து இன்று மாலை வட இலங்கையின் திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாகத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். குறிப்பாகத் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழை (Very Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


