"வெற்றி துரைசாமி தான் சைதை துரைசாமியின் உலகம்" - அன்புமணி வேதனை!!
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி மறைவிற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர முன்னாள் மேயரும், சமூக சேவகருமான சைதை துரைசாமி அவர்களின் புதல்வரும், திரைப்பட இயக்குனருமான வெற்றி துரைசாமி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தமிழக அரசியலிலும், சமுகப் பணிகளிலும் சைதை துரைசாமி அவர்களை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. எம்.ஜி.ஆரை தலைவராக ஏற்று, அவரது காலத்திலிருந்து அரசியலில் இருந்து வரும் சைதை துரைசாமி கல்வி உள்ளிட்ட துறைகளில் ஏராளமான தொண்டுகளை செய்து வருகிறார்.
தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு சைதை துரைசாமி அவர்கள் நடத்தும் மனிதநேய அறக்கட்டளையின் பயிற்சி மையத்தில் படித்து இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட குடிமைப் பணிகளில் பணியாற்றி வருபவர் ஒருவர் இருப்பார். இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அங்கு சைதை துரைசாமி உதவியால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடிமைப் பணி அதிகாரிகள் 10 பேராவது இருப்பார்கள். அந்த அளவுக்கு சைதை துரைசாமி அவர்கள் சமூகப் பணிகளை செய்வதற்கு துணையாக இருந்தவர் வெற்றி துரைசாமி. சமூகப் பொறுப்புடன் கூடிய திரைப்பட இயக்குனராகவும் அவர் உருவெடுத்திருந்தார்.
தந்தையின் வழியில் சமூகப் பணியாற்றி வந்த வெற்றி துரைசாமி தொண்டு உலகத்திலும், பொது வாழ்விலும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டியவர். அதற்கான அனைத்து தகுதிகளும், திறமைகளும் அவருக்கு இருந்தன. ஆனால், அதற்கு முன்பாகவே இளம்வயதில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதை நம்பவே முடியவில்லை; இந்த செய்தியை தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. வெற்றி துரைசாமி தான் சைதை துரைசாமியின் உலகம். வெற்றியின் மறைவு சைதை துரைசாமிக்கு எந்தகைய இழப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவருக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. வெற்றியை இழந்து வாடும் அவரது தந்தை சைதை துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.