துணைவேந்தர் தேர்வு குழு- அரசுக்கு அதிகாரம் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி
துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்கத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கத் தேர்வுக்குழுவை தமிழ்நாடு அரசு நியமித்ததற்கு ஆளுநர் ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்கத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசிதழில் வெளியிட்ட உத்தரவை திரும்பப்பெற உயர்க்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் அறிவிப்பு பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது என்றும் பல்கலைக்கழக வேந்தரின் அனுமதியில்லாமல் தமிழக அரசு தேர்வு குழுவை அமைத்துள்ளது எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய குழுவை நியமித்து செப்டம்பர் 13-ல் அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது. துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க ஆளுநர் ரவி நியமித்த தேடுதல் குழுவில் யூ.ஜி.சி. பிரதிநிதியை நீக்கியிருந்தது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பாணையைத் திரும்பப் பெற உயர்கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.