“அனைவரது உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும்”- பக்தர்களிடம் அர்ச்சகர் பேசிய வீடியோ வைரல்

 
அ அ

அனைவரது உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும் என அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடம் ஆலய குருக்கள் பேசிய வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.

நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் பெங்களூரில் இருந்து வந்த ஆன்மீக குழுவிடம் அக்கோவிலின் சிவா குருக்கள் கோவிலின் வரலாறைப் பற்றி விளக்கியுள்ளார். அப்போது அம்மனின் கையிலும் தாமரைப் பூ இருக்கிறது என்றும் உங்கள் அனைவரின் உள்ளத்திலும் தாமரை மலர வேண்டும் எனவும் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்துள்ளார்.


தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் குருக்கள் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகளை இடதுசாரி அமைப்புகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.