விஜய் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்ட வீடியோ வைரல்..!

 
1 1

கரூரில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், நடிகர் விஜய் நாமக்கல்லில் பிரச்சாரம் முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் அந்த கூட்டத்திற்கு வந்து பேசத் துவங்கினார். கூட்டத்தில் விஜய் பேசி துவங்கும் போதே கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் ஆம்புலன்ஸ்கள் உள்ளே நுழைந்தன.

பின்னர் விஜய் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுமாறு மக்களை கேட்டுக்கொண்டு தொடர்ந்து பேச துவங்கினார். அப்போது, விஜய் மீது செருப்பு வீசப்பட்டது. சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் அதனை தட்டி விட்டனர். அதனை அடுத்து மற்றொரு முறையும் செருப்பு வீசப்பட்டு அது விஜய்யின் பிரச்சார வாகனத்தை தாண்டி சென்று விழுந்தது. அது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக விஜய் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, கிளம்பும் பொழுது, குழந்தை ஒன்று காணவில்லை என ஆதவ் அர்ஜுனா, விஜய்யிடம் தெரிவித்ததால், விஜய் அதனை ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்பினார்.

அவர் கிளம்பிய சில நிமிடங்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களில், கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மருத்துவர்கள், தெரிவித்ததை அடுத்து கரூரில் மிகப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. இச்சம்பவம் குறித்து விஜய் ஆறுதல் தெரிவித்து, தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதற்கிடையே, விஜய் மீது மர்ம நபர்கள் செருப்பு, கற்கள் வீசியதாக தவெக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சூழலில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கூட்ட நெரிசல் குறித்து விஜய்யின் கவனத்தை ஈர்க்க யாராவது செருப்பு வீசியிருக்கலாம் என கூறினார்.

இந்நிலையில், சம்பவத்தின் போது விஜய் மீது செருப்பு வீசியது யார்? என்ற கேள்வி பரவலாக எழுந்து வந்தது. அதை உறுதி படுத்தும் விதமாக கரூர் கூட்டத்தில் விஜய் மீது ஒருவர் செருப்பை வீசும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.