விஜய் சொன்னது சரிதான்..!! 'கட்சி கூட்டணி வேறு; ஆட்சி அமைப்பது வேறு..' - கே.பி.முனுசாமி பேட்டி..

 
kp munusamy kp munusamy

கட்சிக் கூட்டணி என்பது வேறு, தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்பது என்பது வேறு  எனவும், அதிமுக பாஜக கூட்டணி இடையே வரும் கருத்துகளுக்கு தற்போது பதில் சொல்லும் சூழ்நிலை வரவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி  தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி நகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்தனர். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமியிடம், மத்திய இணை அமைச்சர் முருகன் பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா சொல்வது தான் வேதவாக்கு என குறிப்பிட்டுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு  பதில் அளித்த முனுசாமி, “அதிமுகவை பொறுத்தவரை கட்சி கொள்கை மற்றும் மக்களின் தீர்ப்பே எங்களுக்கு வேதவாக்கு., கட்சி கூட்டணி என்பது வேறு, தேர்தல் முடிந்த பின் ஆட்சி அமைப்பது என்பது வேறு, பாஜக அதிமுக கூட்டணியில் பல்வேறு கருத்துக்கள் வரலாம் இதற்கெல்லாம் தற்போது பதில் சொல்லும் சூழ்நிலை வரவில்லை. அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வருகிறார் அதை நோக்கி எங்களது பயணம் தொடரும்.. 

vijay kp munusamy

அதிமுக ஆட்சியில் விசாரணை கைதி உயிரிழப்பு சம்பவங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட போது அரசின் கையாலாகாத தனம் என அப்போது ஸ்டாலின் விமர்சனம் செய்தார், தற்போது அஜித்குமார் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார் என தவெக தலைவர் விஜய் பேசியது சரியானது; அப்போது தமிழகத்தில் தேர்தல் வரவில்லை, தற்போது தேர்தல் வருவதால் முதலமைச்சர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்து வருகிறார் . இதனால் ஸ்டாலின் பயந்து போய் அதிமுக பாஜக பின்னால் மறைந்து கொண்டிருப்பதாக பிதற்றுகிறார்.

திமுக.,வினர் தங்களை காப்பாற்றிக் கொள்ள, நேரடியாக பதில் சொல்ல முடியாததால் இந்து சமய அறநிலைத்துறை நிதியில் கல்லூரி கட்டும் விஷயத்தில் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொன்ன கருத்துக்கள் வேறு, கோவில் நிதியில் முழுமையாக கல்லூரிகள் கட்டி அதனை பராமரிப்பதும், உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது முடியாதது என குறிப்பிட்டார். இதனை திமுகவினர் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்” என்று கூறினார்.