‘மை டிவிகே’ உறுப்பினர் சேர்க்கை செயலியை தொடங்கிவைத்த விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் ‘மை டிவிகே’ என்னும் உறுப்பினர் சேர்க்கை செயலியை அக்கட்சித் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், அடுத்தடுத்து தவெக-வை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவரிசையில் தவெக சார்பாக ‘மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர்’ என்னும் பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரையின் ஒரு பகுதியாகவும், கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை விரைவுபடுத்தவும் ‘மை டிவிகே’ (MY TVK) என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜய், தவெக உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து செயலியை தொடங்கி வைத்து ஒரே குடும்பத்திச் சேர்ந்த 3 தலைமுறை உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இந்தச் செயலி வாயிலாகவும் பொதுமக்கள் தங்களை கழகத்தில் இணைத்துக்கொள்ளலாம்.
மேலும், தவெக தேர்தல் பரப்புரை முன்னெடுப்பையும் விஜய் இன்று தொடங்கிவைக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கக்கூடிய 69 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் நேரில் சென்றும் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளை மேற்கொள்வார்கள்.
அது மட்டுமல்லாமல், இந்தச் செயலி வாயிலாகக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்து, கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.


