மாநாட்டிற்கு வரும் வழியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் நிதியுதவி
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு நேரத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் தலைவர் விஜய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
விக்கிரவாண்டி வி. சாலையில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டிற்கு வருகை தரும் பொழுதும், மாநாட்டில் பங்கேற்று வீடு திரும்பிய போதும் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். திருச்சியை சேர்ந்த விஜய் கலை, சீனிவாசன் மற்றும் சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார்,ரியாஸ், சார்லஸ் மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த உதயகுமார் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். இதற்கு தலைவர் விஜயும் அறிக்கையின் வாயிலாக இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை வரவழைத்து நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. குடும்பங்களின் பொருளாதார சூழ்நிலையை பொருத்து நிதி என்பது வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் தமிழக வெற்றிக் கழகம் ஏற்கும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.