முழுநேர அரசியலில் இறங்கும் விஜய்.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்??
தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்தார். 2026 தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியலில் குதித்துள்ள விஜய், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தவெகவின் முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்தார். தனது கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் முழுநேர அரசியல்வாதியாக மாறுகிறார். முன்னதாக கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ள அவர், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சிக்கான 28 அணிகளை உருவாக்கி அதற்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

தொடர்ந்து பூத் கமிட்டி முதல் தலைமை நிர்வாகிகள் வரை ஒவ்வொரு செங்கல்லால கட்டமைத்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தவெக தலைவர் விஜய் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் தஞ்சாவூரில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 100 இடங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


