தவெக உறுப்பினர் சேர்க்கை செயலி- விஜய் நாளை அறிமுகம் செய்துவைக்கிறார்

 
அரசியல் கட்சி தொடங்கியது ஏன்? – விஜய் விளக்கம் அரசியல் கட்சி தொடங்கியது ஏன்? – விஜய் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை, தவெக தலைவர் விஜய் நாளை (ஜூலை 30) காலை 11 மணிக்கு அறிமுகம் செய்து வைக்கவிருப்பதாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.

  ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ சமூக நீதி பாதையில் பயணம்..  - விஜய் கூற உறுதிமொழியேற்ற தவெக நிர்வாகிகள்.. 

இதுதொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்களின் நலனை எதிர்நோக்கி, மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் திரு. விஜய் அவர்கள் தலைமையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளைத் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவோடு நாம் மேற்கொண்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். அதன் ஒரு பகுதியாக நமது கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை மேற்கொள்ள, உறுப்பினர் சேர்க்கை அணியை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, கடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இரண்டு கோடி உறுப்பினர்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்கும் வகையில், நாளை (30.07.2025) காலை 11 மணி அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அறிமுக நிகழ்வு, நடைபெற உள்ளது.


சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், நம் வெற்றித் தலைவர் அவர்கள் இந்தப் பிரத்யேகச் செயலியை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து உறுப்பினர் சேர்க்கைப் பணியைத் துவக்கி வைக்க உள்ளார். ஏற்கெனவே https://tvk.family என்ற இணையத்தளம் வாயிலாக பொதுமக்கள் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொள்ளும் நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதை அனைவரும் அறிவீர்கள். தற்போது நம் வெற்றித் தலைவர் அவர்கள் அறிமுகப் படுத்தும் இந்தச் செயலி வாயிலாகவும் பொதுமக்கள் தங்களை கழகத்தில் இணைத்துக்கொள்ளலாம். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கக்கூடிய 69 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் நேரில் சென்றும் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளை மேற்கொள்வார்கள்.

விஜய்

அது மட்டுமல்லாமல், இந்தச் செயலி வாயிலாகக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்து, கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆகவே, நாளை நடைபெற உள்ள உறுப்பினர் சேர்க்கைச் செயலி அறிமுகக் கூட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அணியின் நிர்வாகிகள் ஆகியோர் மட்டும் நேரில் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்றும், வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, உறுப்பினர் சேர்க்கைப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.