கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லத் தெரிந்த விஜய்க்கு, கார்த்திகை தீபத்திற்கு வாழ்த்து சொல்லி தெரியாதா? - நடிகை கஸ்தூரி சரமாரி கேள்வி.
பாஜக ஆதரவாளரும், நடிகையுமான கஸ்தூரி இன்று திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு கைதான கோட்டை தெரு பொதுமக்களை சந்தித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சியில் அரசியல் ரீதியாக கைதான முதல் பெண் நான்தான். இன்று திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதேபோல, இங்கு ஆயிரம் ஆண்டுகளாக ஏற்றப்பட்டு வந்த தீபத்தூணில் கடைசியாக 1984-ல் தீபம் ஏற்றியுள்ளார்கள். தற்போது அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் போராடி கைதாகி இருக்கிறார்கள். அவர்களை சந்திக்கும் பாக்கியமும் எனக்கு கிடைத்திருக்கிறது.
தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒருவர் தனது உயிரை இழந்திருக்கிறார். அதைக்கூட கொச்சையாக பிரச்சாரம் செய்கிறார்கள். தீபக் கல்லை ‘சர்வே தூண்’ என சொல்கிறீர்கள். ஆனால், அங்கு தீபம் ஏற்றப்பட்டு இருப்பது வரலாற்று உண்மை. தூணை கொச்சைப்படுத்தினீர்கள் பொறுத்துக் கொண்டோம். தற்போது, ஒருவர் உயிரிழந்திருக்கிறார் அதையும் கொச்சைப்படுத்துகிறீர்கள். இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மலை மேல் மக்கள் சென்றால் கலவரம் வந்துவிடும் என்று சொன்னீர்கள். இன்றைக்கு எப்படி முழுவதுமாக திறந்து விட்டீர்கள். உங்கள் தர்காவிற்கு வந்து நான் வழிபட தயார் எங்கள் தீபத்தூணுக்கு வந்து நீங்களும் விளக்கேற்றுங்கள்.
இந்து நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் திமுகவினர், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் காசி விஸ்வநாதர் கோயில் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் முருகன்தான் குலதெய்வம், மோட்ச தீபம் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவு விளக்கு ஏற்றும் இடம். அங்கு கடவுளுக்கு தீபம் ஏற்ற மாட்டார்கள். கடவுளுக்கு குன்றின் மேல் தான் தீபம் ஏற்றுவார்கள்.
வெங்கடேசன் போன்றவர்கள் மிகவும் தவறான போக்கில் பேசுகிறார்கள். கலவரம் வருகிறது. இஸ்லாமியர்கள் மனம் புண்படும் என்று பல்வேறு காரணங்களை சொல்லி இஸ்லாமியர்கள் மீது பொய் பழி போடுகிறார்கள். முஸ்லிம் சகோதரர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது, நடுவில் அரசியல் செய்கிறவர்கள் வேறு எதிலாவது அரசியல் செய்யுங்கள். உங்கள் ஆட்சியை திசை திருப்ப முருகனை பயன்படுத்தாதீர்கள்.
திருமாவளவன் மீது நான் மரியாதை வைத்திருந்தேன். சேராத இடம் சேர்ந்து மனசாட்சிக்கு விரோதமாக பேசுகிறார். என் மகன் பெயர் கார்த்திகேயன். கர்நாடகாவில் முருகன் இருக்கிறார், அங்கு நிறைய பேருக்கு முருகன் பெயர் உள்ளது. இவர்கள் எல்லாம் பிராமணர்கள். அவருக்கு விஷயமே தெரியவில்லை, நம்பிக்கையும் இல்லை. அவருக்கு வெறுப்பு மட்டும் தான் உள்ளது. ஆபாச சிற்பம் இருப்பதுதான் இந்து கோயில்கள் என்று சொன்ன பெரியவர் அவர்” என்றார்.
மேலும் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் விவகாரம் உலக பிரச்சனையாக மாறிவிட்டது. இந்தியாவில் எல்லா இடத்திலும் சுப்பிரமணிய சுவாமியை சர்ச்சை பொருளாக்கி பிரபலப்படுத்தி விட்டார்கள். அதை செய்தவர்களுக்கு நன்றி. ஏனென்றால், முருகனை வழிபடாதவர்களும் இன்று படித்து தெரிந்து கொள்கிறார்கள்.
அதேபோல், பனையூரில் இருக்கிறார் நண்பர் விஜய். அவர் அதை தாண்டி ஈரோட்டுக்கு சென்று இருக்கிறார். ஆனால் திருப்பரங்குன்றம் அவருக்கு தெரியாது என்று சொல்ல முடியாது. கிறிஸ்துமஸ் விழாவில் நேற்று பங்கெடுத்திருக்கிறார். கார்த்திகை தீபத்திற்கு ஒரு வாழ்த்து சொல்லி இருக்கலாம். அனைத்து நம்பிக்கையும் உள்ளது என்று சொன்னால் தான் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட படங்களை வைத்து அரசியல் செய்ய தகுதியானவர்.
இப்போது அவர்கள் பெயரை சொல்வதில்லை எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை சொல்லி அரசியல் செய்கிறார். இப்படி இருக்க வேண்டும் என்றால், அவர்களை போல கடவுளை நம்புபவரை நீங்கள் மதிக்க வேண்டும். தமிழகத்துக்கு முதல்வராக வேண்டும் என்னும் கனவு இருப்பவர், தமிழகத்தில் பற்றி எரியும் தீபப் பிரச்சனையை பேசாதது மிகப்பெரிய தவறு. ஒருவேளை அவருக்கு எழுதிக் கொடுப்பவர்கள் இன்று விடுமுறையா? என்று தெரியவில்லை.
எதுவாக இருந்தாலும் அவர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றம் விஷயத்தில் ஆமாம், இல்லை என்று சொல்லுங்கள் விஜய். பேச மடந்தையாக இருந்தால், உங்களுக்கு பேச விருப்பமில்லை என்று நினைப்பதா அல்லது பேச தெரியவில்லை என்று நினைப்பதா? இரண்டுமே மோசம் தான்” என விமர்சித்தார்.


