விஜயுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையா? விஜய பிரபாகரன் பளிச் பதில்

 
விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? விஜய பிரபாகரன் பளிச் பதில் விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? விஜய பிரபாகரன் பளிச் பதில்

விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி கிடையாது.  கோட் திரைப்படத்தின் போதும் விஜயகாந்த் நினைவு தினத்தின்போதும் விஜயை சாதாரணமாக சந்தித்து பேசி இருக்கின்றேன், கூட்டணி தொடர்பாக அவரிடம் எதுவும் பேசவில்லை என தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், “பொள்ளாச்சி சம்பவத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு சரியான தீர்ப்பு, 2026 சட்டமன்றத்  தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு உயரும். எங்கள் கட்சியின் சார்பில் பல்வேறு நபர்கள் கோட்டைக்குள் சென்று மக்கள் பிரச்சனைக்கு சட்டசபையில் குரல் கொடுப்பார்கள். எப்படி 2011ம் ஆண்டு விஜயகாந்தோடு சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றார்களோ, அதே போல் தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் 2026ல் பல நிர்வாகிகள் கோட்டைக்குள் செல்வார்கள். கூட்டணி விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் தலைமையும் பொதுச் செயலாளரும் அறிவிப்பார்கள். 

விஜயகாந்த் மகன் என்பதே எனக்கு மிகப்பெரிய பதவி, மிகப்பெரிய பொறுப்பு. அதனால் மக்கள் ஒவ்வொரு ஊரிலும் மிகப்பெரிய ஆரவாரத்துடன் வரவேற்பை கொடுக்கின்றனர். தற்போது தேமுதிக இளைஞரணி செயலாளராக வரும்பொழுது கூடுதலாக மக்களிடம் வரவேற்பு உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன். விஜயகாந்தின் கொள்கைகளை எங்கள் கட்சியில் உள்ள இளைஞர்கள் மூலம் அனைவருக்கும் கொண்டு செல்வோம். பல லட்சம் இளைஞர்கள் தேமுதிகவையும் என்னையும் நம்பி கட்சிக்கு வர வேண்டும். தேமுதிகவால் புதிய தமிழ்நாட்டை உருவாக்க முடியும். தேமுதிகவை பலப்படுத்தி வருகிறோம், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வரும்.


விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி கிடையாது. கோட் திரைப்படத்தின் போதும் விஜயகாந்த் நினைவு தினத்தின்போதும் விஜயை சாதாரணமாக சந்தித்து பேசி இருக்கின்றேன், கூட்டணி தொடர்பாக அவரிடம் எதுவும் பேசவில்லை. விஜயகாந்த் இல்லாமல் முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைவரிடமே ஒரு மன வலி இருக்கத்தான் செய்கிறது. அவரின் ஆசையையும் கொள்கையும் வென்று எடுப்பதுதான் ஒவ்வொரு தொண்டரின் கடமையும். நிச்சயம் 2026 இல் விஜயகாந்தின் ஆசையை வெற்றியடையச் செய்து விஜயகாந்த் ஆலயத்தில் அவரது பாதத்தில் சமர்ப்பிப்போம். 

எனக்கு 33 விஜய்க்கு 50 அதனால் என்னை விஜயோடு ஒப்பிட வேண்டாம். அவர் என்னைவிட சீனியர். அவர் முதன்முதலில் பேசும்பொழுது அரசியலில் என்னை விட நீங்கள் சீனியர் என்று கூறியுள்ளார். அதனை பெருமையாக நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அனுபவம், சினிமாவைப் பொறுத்தவரை அவர் என்னைவிட பெரிய ஆள். இன்று அவர் கட்சி ஆரம்பித்து அவர் பின்னால் பல லட்சம் இளைஞர்கள் இன்று இருக்கிறார்கள். அது அவருடைய பலம். 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் பின்னால் பல லட்சம் இளைஞர்கள் இருந்தார்கள் அது தேமுதிகவின் பலம். இன்று நான் வரும்பொழுது எங்களின் நிலைப்பாடு என்ன தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்று கஷ்டப்பட்டு அதனை கொண்டு சென்று விஜயகாந்த் என்ன செய்தாரோ அதனை நாங்கள் கொண்டு செல்வோம்.


எம்ஜிஆர் போல் வெற்றியடைவேன் என்று சொல்வது விஜயின் நம்பிக்கை. அதை மக்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். விஜயகாந்த் தான் சொன்னார் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பேன் என்று. இந்தியாவில் வேறு எந்த தலைவர் கூறினார் விஜயகாந்த் தான் கூறினார். தேமுதிகவுக்கு ஒரு சதவீதம் வாக்கு என்று கூறுகிறார்கள். 2011இல் மக்கள் விஜயகாந்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதேபோல் ஒரு ஆதரவை 2026 இல் பிரேமலதா விஜயகாந்த்திற்கு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பொய் பிரச்சாரங்களை தாண்டி விஜயகாந்தையும் கட்சியையும் மக்கள் நம்புகிறார்கள். நிச்சயம் 2026 ஒரு பொற்கால ஆட்சியாக அமையும். தேமுதிகவுக்கு வாக்கு சதவீதம் குறையவில்லை, கடந்த தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரித்து தான் உள்ளது. 10 லட்சம் வாக்கிலிருந்து 12 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது என்று அதிமுகவே கூறியது” என்றார்.