ரேஷன் கடைகளில் தக்காளி, காய்கறிகளை மலிவு விலையில் விற்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்..

 
vijayakanth

அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மலிவு விலைக்கு விற்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. சமையலுக்கு மிக அவசியமான தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. தக்காளி விலையைப் போல அவரக்காய், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தக்காளி

பீட்ரூட், வெண்டைக்காய், கத்திரிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், புடலங்காய், கொத்தவரங்காய், இஞ்சி, சின்ன வெங்காயம் என்று அனைத்து வகை காய்கறிகளும் விலை உயர்ந்து விட்டது. ஏற்கனவே அனைத்து விலைவாசிகளின் உயர்வால் அன்றாட செலவு கூட பணம் இல்லாமல் ஏழை எளிய மக்கள் தவித்து வரும் நிலையில், தற்போது காய்கறிகளின் விலை உயர்வால் விழி பிதுங்கி நிற்கின்றனர். பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை குறைந்த விலைக்கு விற்பதை போன்று, அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மலிவு விலைக்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.