சச்சினின் சாதனைகளை முறியடித்த விராட் கோலிக்கு விஜயகாந்த் வாழ்த்து
ஒருநாள் போட்டிகளில் 50-வது சதம், உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்தது என்ற சச்சினின் 2 சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், “இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த 673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் 20 ஆண்டுகால சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இது ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்ளும் தருணமாகும். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மேலும் மேலும் பல சாதனைகளை படைத்து இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.