“நான் கேமிங் செயலிக்கு மட்டுமே விளம்பரம் செய்துள்ளேன்”- அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி
சூதாட்ட செயலிக்கும் கேமிங் செயலிக்கும் வித்தியாசம் உள்ளது, நான் கேமிங் செயலிக்கு மட்டுமே விளம்பரம் செய்துள்ளேன் என நடிகர் விஜய் தேவரகொண்ட அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு பேட்டியளித்துள்ளார்.
சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்ததாக அமலாக்கத்துறை அளித்த நோட்டீஸிற்கு நடிகர் விஜய் தேவரகொண்ட நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 4 மணி நேர விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலில் கேம்மிங் செயலிக்கும், பேட்டிங் செயலிக்கும் வித்தியாசம் உள்ளது. அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நான் கேம்மிங் செயலிக்கு விளம்பரம் செய்தேன். கேம்மிங் செயலி மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, உரிய ஜி.எஸ்.டி. , டி.டி.எஸ். செலுத்தி சட்டத்திற்கு உட்பட்ட செயலியாகும். பல கேம்மிங் செயலிகள் கிரிக்கெட், கால்பந்து, ஒலிம்பிக், கபடி போன்ற சர்வதேச , தேசிய அளவிலான போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்கிறார்கள். இருப்பினும் என்னுடைய பெயர் இந்த சர்ச்சையில் வந்தது அதற்கான விளக்கம் கொடுத்துள்ளேன். என்னிடம் நான் பெற்ற பணம் குறித்தும் எனது ஒப்பந்தம், நடைமுறைகள் குறித்து கேட்டார்கள் அதற்குரிய விளக்கம் கொடுத்துள்ளேன்” என்றார்.


