திருச்செந்தூர் கோவிலில் விஜய்க்கு அரோகரா- தவெகவினரால் பரபரப்பு

 
அ அ

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள் பிரகாரத்தில் உள்ள வரிசையில் நின்றபடி ஒலித்த தமிழக வெற்றி கழகத்திற்கு அரோகரா என கோஷம் எழுப்பியவர்கள் மீது கோவில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த நிலையில் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பயன்படுத்துவதற்கும் வீடியோ கேமரா மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் புகைப்படத்தை காண்பித்தும் "தமிழக வெற்றி கழகத்திற்கு அரோகரா" என்ற கோஷத்துடனும் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள வளாகத்தில் காத்திருந்த சில பக்தர்களிடம் நீங்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்கு செலுத்த வேண்டும் எனவும் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அறநிலையத்துறையை இருக்காது எனவும் கூறி சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். 


தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ள நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்துறை கண்காணிப்பாளர் விவேக் திருச்செந்தூர் கோவில் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதில் கோவிலுக்குள் அரசியல் குறித்து பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.