"பணப்பட்டுவாடாவை தடுப்பதாக கூறி வியாபாரிகளை துன்புறுத்துகிறார்கள்”- விக்கிரமராஜா புகார்

 
அ

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பணப் பட்டுவாடாவை தடுக்கிறோம் என்ற பெயரில் வியாபாரிகள் விவசாயிகளின் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்கை, சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிமராஜா மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிமராஜா, “பணப்பட்டுவாடாவை தடுப்பதாக கூறி  பறக்கும் படையினர் வியாபாரிகளை துன்புறுத்துகிறார்கள். பறக்கும் படையினர் வியாபாரிகள் , விவசாயிகளின் பணத்தை பறிமுதல் செய்வது தொடர்கதையாக உள்ளது. தேர்தல் என்றாலே வியாபாரிகள் விவசாயிகள், ஆடு, மாடு விற்பவர்கள் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. பணப்பட்டுவாடா எங்கே நடக்கிறது என தேர்தல் அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும். ஆனால்.. வியாபாரிகளையும் விவசாயிகளையும் தேர்தல் அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். வியாபாரிகள் விவசாயிகளிடம் பணம் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை வரும் 27 ஆம் தேதிக்குள் கைவிட வேண்டும். இல்லையென்றால் வரும் 31ஆம் தேதி முதற்கட்டமாக சென்னை மாநகரத் தேர்தல் அலுவலகமான மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

தேர்தல் அதிகாரிகள் தங்கள் பறிமுதல் நடவடிக்கைகளை கைவிடவில்லை என்றால் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எறார்.