வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு!
விழுப்புரம் அருகே வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் நேற்று ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்த நிலையில், விழுப்புரம் அருகே வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவேல்பட்டு பகுதியில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தசென்றபோது அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியுள்ளனர். முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் போதிய உதவிகளை செய்யவில்லை என கூறி மக்கள் சேற்றை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.


