விஜய் பரப்புரையில் விதிமீறல்- தவெக நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்குப்பதிவு
தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜயின் நேற்றைய பரப்புரைப் பயணத்தில் ஏற்பட்ட 5 விபத்துகள் தொடர்பாக, அக்கட்சியின் நிர்வாகிகள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக தாழையூத்து பகுதிக்குச் சென்றார். ரோடு ஷோ வை முடித்துவிட்டு மீண்டும் வண்ணாரப்பேட்டை பகுதியில் ரோடு ஷோ நடத்தினார்.
அப்பொழுது அவரது வாகனத்தை பின் தொடர்ந்து சாலை விதிகளை மதிக்காமல் ஏராளமான தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் விதி மீறல்களில் ஈடுபட்டனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 5 விபத்துகளும் நடைபெற்றன. இந்த நிலையில் ரோடு ஷோ நெல்லையிலும்,தூத்துக்குடியிலும் நடைபெற்றது. இதில் ஏராளமான விதி மீறல்கள் நடைபெற்ற வகையில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களைச் சார்ந்த 11 தமிழக வெற்றி கழக அமைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை சரக டிஐஜி சரவணன் தெரிவித்துள்ளார்.



