"பாலின சமத்துவத்தில் அக்கறையற்ற விதி மீறல்" - நாடாளுமன்றத்தில் எனது கேள்வி - நிதியமைச்சர் பதிலில் அம்பலம்!!

 
mp

நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் சட்ட விதி மீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது ஒன்றிய நிதியமைச்சரின் பதிலிலிருந்து உறுதியாகியுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன்  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், " 2013 கம்பெனிகள் சட்டத்தில் பிரிவு 149 யின்படி 100 கோடி செலுத்தப்பட்ட மூலதனம் அல்லது 300 கோடி குறைந்த பட்ச விற்பனை உள்ள கம்பெனிகள் தங்கள் இயக்குனர் அவையில் ஒரு பெண் இயக்குநரையாவது கொண்டிருக்க வேண்டும். பாலின சமத்துவ நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட இந்த அம்சம் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அறிய நாடாளுமன்றத்தில் கேள்வி (எண் 27/ 05.02.2024) எழுப்பி இருந்தேன்.

*நிதியமைச்சர் பதில்*

su venkatesan

அதற்கு பதில் அளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தந்துள்ள விவரங்கள் எந்த அளவுக்கு நூற்றுக் கணக்கான கம்பெனிகள், பாலின சமத்துவ பார்வை இன்றி பெண் இயக்குனர் சம்பந்தமான விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளன என்பது வெளி வந்துள்ளது.

20162024 காலத்தில் 81 கம்பெனிகள் மீது தண்டத் தொகையாக ரின்1.41 கோடி விதிக்கப்பட்டுள்ளது. 2018 லிருந்து "செபி" அமைப்பு விதிகளின்படி டெல்லி, மும்பை பங்குச் சந்தைகள் விதித்துள்ள தண்டத்தொகை விவரங்களை சேர்த்தால், 2019 - 2024 காலத்தில் 432 கம்பெனிகள் மீது 25 கோடி தண்டம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

*சு.வெங்கடேசன் கருத்து*

su venkatesan

இந்த பதில் எந்த அளவுக்கு நூற்றுக் கணக்கான கம்பெனிகள் சட்ட மீறல்களில் ஈடுபடுகிறார்கள், ஒரு பெண் இயக்குனர் கூட இல்லாமல் கம்பெனிகளை நடத்துகிறார்கள், பாலின சமத்துவம் குறித்த அக்கறை இன்றி செயல்படுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகிறது. நூற்றுக் கணக்கான கம்பெனிகள் இப்படி சட்டம் வந்து 10 ஆண்டுகள் ஆகியும், செபி விதிமுறைகள் வந்து 6 ஆண்டுகள் ஆகியும் மீறல்களை தொடர்வதற்கு காரணங்கள் ஆராயப்பட வேண்டும்.

ஒன்று தண்டத்தொகை மிகக் குறைவாக இருப்பது. 100 கோடி மூலதனம், 300 கோடி விற்பனை உள்ள கம்பெனிகள் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை தண்டத்தொகையை கட்டி விட்டு தப்பித்துக் கொள்வது எளிதாக உள்ளது. இரண்டாவது, இயக்குனர் நியமனங்களில் அரங்கேறும் மீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது என்று 2020 இல் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் இத்தகைய துணிச்சலை அவர்களுக்கு தந்திருக்கலாம். ஆகவே அரசியல் உறுதியோடு கம்பெனிகள் மீதான கடும் நடவடிக்கை எடுக்கிற மாற்றங்களை அரசு கொண்டு வர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.