ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதங்கங்களை வென்ற இந்தியா - சசிகலா வாழ்த்து

 
sasikala

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி ஏற்கனவே 20 தங்கம் உட்பட 83 பதக்கங்களை வென்று இருந்த நிலையில் தற்போது 25 தங்கப்பதக்கங்கள் உட்பட 100 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது என சசிகலா குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக சசிகலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி இதுவரை அதிகபட்சமாக 70 பதக்கங்களை வென்று இருந்த நிலையில், தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் 100 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ள நம் இந்திய வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஏற்கனவே 20 தங்கப்பதக்கங்கள் வென்ற நிலையில், அதனைத்தொடர்ந்து ஆடவர் அணிக்கான வில்வித்தை காம்பௌண்ட் பிரிவு, ஆடவர் அணிக்கான ஆக்கி போட்டி, மகளிருக்கான தனிநபர் வில்வித்தை காம்பௌண்ட் பிரிவில் ஜோதி சுரேகா அவர்களும், ஆடவருக்கான தனிநபர் வில்வித்தை காம்பௌண்ட் பிரிவில் ஓஜாஸ் பிரவீன் அவர்களும், மகளிருக்கான கபடி போட்டி ஆகியவற்றில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் உட்பட 100 பதக்கங்களை வென்று உலக அரங்கில் புதிய வரலாற்று சாதனையை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.