தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள் - சசிகலா

 
sasikala

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவது வேதனை அளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார். 

சசிகலா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.  மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கூட முன் வராத திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்தவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் சுமார் 20,000க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காமல் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் மிகவும் சிரமப்படுவது வேதனை அளிக்கிறது. மேலும், தண்ணீர் சப்ளை துண்டிக்கப்பட்டு இருப்பதற்கு என்ன காரணம் என அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கேட்கும்போது அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை என்றும், மிகவும் மெத்தனப்போக்கில் இருப்பதாகவும் சொல்லி மக்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர்.

sasikala

திமுக தலைமையிலான அரசு மக்களை மறந்து, மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்தாமல் அடுத்து வரும் தேர்தலை மட்டும் குறி வைத்து செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவினர் தேர்தல் முன் ஏற்பாடாக அவர்களின் கட்சிநிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலும், அடுத்து ஆட்சியை எப்படி பிடிப்பது என்ற ஒரே சிந்தனையில் மட்டும் செயல்பட்டு கொண்டிருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல். மக்களை கவனிக்காத, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத எந்த அரசாக இருந்தாலும், அவர்கள் எத்தனை பேருடன் கூட்டணி அமைத்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை. எனவே, திமுகவையும் அதன் தோழமை கட்சியினரையும் தமிழக மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்பது உறுதி, மேலும் திமுகவினரை தமிழக மக்கள் உங்கள் வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைமையிலான அரசு பெரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்ய தேவையான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர், உணவு, மருத்துவம், வசிப்பிடம் போன்ற அனைத்தும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நிரந்தர தீர்வினை எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.