திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சசிகலா நாளை சுற்றுப் பயணம்

 
sasikala

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வி.கே.சசிகலா நாளை முதல் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் வி.கே.சசிகலா அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றதால் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் வலியுறுத்தல் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல் அவரது ஆதரவாளர்களான டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை ஒருங்கிணைப்பேன், மீண்டும் தலைமை ஏற்பேன் என கூறினார். இதனை தொடர்ந்து அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அவர் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். 

sasikala

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாளை (15-ந்தேதி) காலை 11 மணிக்கு தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்படும் சசிகலா, கோவை வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி அந்தியூர் பிரிவை சென்றடைகிறார். மாலை 4 மணியளவில் அங்கிருந்து தனது புரட்சிப் பயணத்தை தொடங்கும் அவர் கவுந்தம்பாடி நான்கு ரோடு, கோபி செட்டிபாளையம் எம்.ஜி.ஆர். திடல் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வளர்மதி பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் சசிகலா திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகம் அருகில் மற்றும் அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகிலும் தொண்டர்களை சந்திக்கிறார். இதில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது