"அவரு சாமிங்க”- விஜய்காந்த் நினைவிடத்திற்கு இருமுடி கட்டி வந்த தொண்டர்கள்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் இன்று அனு சரிக்கப்பட்டது.
தே.மு.தி.க. தலைமை அலுவ லகத்தில் உள்ள விஜயகாந்த் ஆலயம் நினைவிடத்தில் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு குருபூஜை என்ற பெயரில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நினைவிடத்திற்கு கருப்பு உடையுடன் ஊர்வலமாக சென்று அவர் மரியாதை செலுத்தினார். நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்தும் நினைவிடத்தில் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் பிரேமலதா விஜயகாந்த் சிலையை கட்டி பிடித்தபடி கண்ணீர் மல்க காணப்பட்டார். இந்த ஊர்வலத்தில் தேமுதிக பொருளாளர் எல் கே சுதீஷ், தலை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன்களான தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், நடிகர் சண்முகபாண்டியன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்தனர். சென்னை மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தேமுதிக தொண்டர்கள் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விஜயகாந்த் நினைவிடத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரேமலதா மற்றும் அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், எல்.கே.சுதீஷ் ஆகியோர் வணக்கம் தெரிவித்து வரவேற்றனர். மாவட்ட செயலாளர் விருகை வி. என். ரவி, அ.தி.மு.க நிர்வாகிகளான முன்னாள் எம்.பி. எஸ்.ஆர். விஜயகுமார், கமலக்கண்ணன், வாலாஜாபாத் கணேசன் உள்பட பலரும் பங்கேற்றனர். தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளரும், துணை முதல் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்த போது பிரேமலதாவும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி கொண்டு இருந்தார். அவர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றார். அமைச்சர்கள் எ.வ. வேலு, மா.சுப்ரமணியன், பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ ஆகியோரும் உதயநிதி ஸ்டாலினுடன் வந்திருந்து விஜயகாந்த் க்கு மரியாதை செலுத்தினார்கள். விஜயகாந்த் நினைவிடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,ஙமுன்னாள் தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், நடிகை கஸ்தூரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சி தலைவர் ஏ.சி .சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், திராவிட வெற்றி கழக தலைவர் மல்லை சத்யா, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மண்டல செயலாளர் ராஜேந்திர பிரசாத், பெப்சி சார்பில் திரைப்பட இயக்குனர்கள் ஆர்.கே செல்வமணி, பேரரசு, சண்டை பயிச்சியாளர் ஜாக்குவார் தங்கம், இசையமைப்பாளர் தீனா மற்றும் திரை பிரபலங்களும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலையில் இருந்தே தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சி அலுவலகத்தில் திரண்டு இருந்தனர். அவர்களோடு பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று மரியாதை செலுத்தினார்கள். விஜயகாந்த் நினைவிடத்திற்கு அவரது தீவிர தொண்டர்கள் பலர் இருமுடி கட்டியும், பால் குடம் எடுத்தும் வந்திருந்தனர். பலர் நினைவிட வளாகத்திலேயே மொட்டை அடித்துக் கொண்டனர். குழந்தைக்கு விஜயகாந்த் மகன்கள் விஜயராஜ் என்று பெயரிட்டனர். நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தேமுதிக அலுவலக வாசலில் விற்பனை செய்யப்பட்ட பூக்களை வாங்கி சென்று மரியாதை செலுத்தினார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் தேமுதிக அலுவலகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தலைவர்கள் வருவதற்கு தனி வழியும் தொண்டர்கள் செல்வதற்கு தனி வழியும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. விஜயகாந்த் நினைவு நாளையொட்டி கட்சி அலுவலகத்தில் அன்னதானமும் வழங்கப்பட்டது. சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் தேமுதிகவினர் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள். விஜயகாந்த் நினைவிடம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.


