‘வாக்கு திருட்டு’ தவறான கதை.!! ஊழியர்களின் நேர்மை மீதான தாக்குதல் - தேர்தல் ஆணையம்..!!
வாக்குத் திருட்டு போன்ற மோசமான சொற்களை பயன்படுத்தி தவறான கதையை உருவாக்க முயற்சிப்பது, கோடிக்கணக்கான இந்திய வாக்காளர்கள் மீதான நேரடித் தாக்குதல் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபடுவதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். கர்நாடகாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 12,000 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தேர்தல் ஆணையத்தின் தோல்வியையும், பாஜகவின் மோசடியையும் காட்டுவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதே இந்த முறைகேடு நடந்திருப்பதாகவும் இது இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் அவர் விமர்சித்தார்.

அதேநேரம் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1951-1952 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் தேர்தலிலிருந்தே "ஒரு நபர் ஒரு வாக்கு" என்ற சட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
எந்தவொரு தேர்தலிலும் உண்மையில் இரண்டு முறை வாக்களித்ததற்கான ஆதாரம் யாரிடமாவது இருந்தால் இந்தியாவின் அனைத்து வாக்காளர்களையும் எந்த ஆதாரமும் இல்லாமல் திருடர் என்று வர்ணிப்பதற்குப் பதிலாக அந்த ஆதாரத்தை எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்துடன் தேர்தல் ஆணையத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நமது வாக்காளர்களுக்கு "வோட் சோரி" வாக்குத் திருட்டு போன்ற மோசமான சொற்றொடர்களைப் பயன்படுத்தி ஒரு தவறான கதையை உருவாக்க முயற்சிப்பது, கோடிக்கணக்கான இந்திய வாக்காளர்கள் மீதான நேரடித் தாக்குதல் மட்டுமல்ல, லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களின் நேர்மையின் மீதான தாக்குதலும் ஆகும்”என்று தெரிவித்துள்ளது.


