2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தம்... 234 தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 234 தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அதிக வாய்ப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளது. இதன்படி, பதிவு செய்வதற்கு வருடத்திற்கு நான்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. ( ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1). இது போன்று, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப்பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு ஐனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பணிகளின் போது பெறப்படும் விண்ணப்பங்கள் மீது அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
இதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 234 தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அதிகாரிகளின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அரசிதழில் வெளியிட்டுள்ளார். அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள் வாக்காளர் பதிவு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.


