புதுச்சேரி மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார் வி.பி.ராமலிங்கம்
புதுச்சேரி மாநில பாஜக தலைவராக ராமலிங்கம் பதவி ஏற்றார். கட்சி நிர்வாகிகள்- தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவரிடம் முன்னாள் தலைவர் செல்வகணபதி எம்பி கட்சியின் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைத்தார்.

அகில இந்திய பாஜனதா தலைவர் அடுத்த மாதம் (ஜூலை) புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதனையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜனதா தலைவர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். புதுவை மாநிலத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது. தேர்தலில் நேற்றைய தினம் ராமலிங்கம் மாநில தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து தற்போதைய தலைவர் செல்வகணபதி எம்பி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்தனர்.
மாநில தலைவர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் போட்டியின்றி ராமலிங்கம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று கட்சித்தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. புதிய மாநில தலைவர் ராமலிங்கம் பதவி ஏற்பு விழா மரப்பாலம் சுகன்யா கன்வென்சன் சென்டரில் இன்று நடந்தது. பதவி ஏற்பு விழாவை யொட்டி நகர பகுதியில் விழாவுக்கு வரும் தலைவர்களை வரவேற்று முக்கிய சாலை சந்திப்புகள், சதுக்கங்கள், வழியெங்கும் பேனர்கள் வைத்திருந்தனர். புதிய தலைவர் பதவியேற்புக்காக காரைக்கால், மாகி, ஏனாம் மற்றும் புதுவையின் பல்வேறு தொகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சுகன்யா கன்வென்சன் சென்டரில் திரண்டனர். அங்கு பதவியேற்பு விழா நடந்தது.
புதிய தலைவராக ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை தேர்தல் அதிகாரி அகிலன் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அகில இந்திய பொதுச்செயலாளர் தருண்சுக் முன்னிலையில் ராமலிங்கம் பதவியேற்றார். அவரிடம் முன்னாள் தலைவர் செல்வகணபதி எம்பி கட்சியின் நிர்வாக பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய தலைவர் வி.பி.ராமலிங்கத்துக்கு, தேசிய பொதுச்செயலாளர் தருண்சுக், அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, முன்னாள் எம்எல்ஏக்கள் வெங்கடேசன், அசோக்பாபு, தீப்பாய்ந்தான் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.


