கொச்சை பேச்சு.. இது தமிழ் பண்பாடு அல்ல - வேல்முருகனுக்கு தமிழிசை கண்டனம்..!!

 
 தமிழிசை  தமிழிசை

தவாக தலைவர் வேல்முருகனின் கொச்சை பேச்சை வன்மையாக கண்டிப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

தவெக கல்வி விருது வழங்கும் விழாவில்  பள்ளி மாணவர்கள், நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை அன்பின் வெளிப்பாடாக கட்டியணைப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்துப் பேசினார். அவரது அநாகரீகமான பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

வேல்முருகன்

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் திரு.வேல்முருகன்  அவர்களே உங்கள் கொச்சையான பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்..... தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தம்பி திரு.விஜய் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் தரும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார். சில நேரங்களில் அதில் அவர் பேசிய அரசியல் கருத்துக்களில் கூட எனக்கு மாறுபாடு உண்டு. ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை அதிகம் சந்தித்து அவர்களின் அறிவுத்தாகத்தை அறிந்தவள் என்ற வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதை நான் வரவேற்கிறேன். தமிழ் அழகானது; உங்கள் மனது தான் அழுக்கானது.

 குழந்தைகள் அவரை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு மட்டுமே. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு. ஆனால் அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்த குழந்தைகளின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல்,  அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவது ஆகும்.  தாங்கள் இவ்வாறு புண்படுத்துவது தமிழ் பண்பாடும் இல்லை. மனித நேயமும் அல்ல.  திரு.வேல்முருகன் அவர்களின் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.