சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை

 
ஒத்திகை ஒத்திகை

மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில்  போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. விமான நிலையம், மணலி சிபிசிஎல், எண்ணூர் துறைமுகத்தில் ஒத்திகை நடைபெற்றது. 


பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் இந்த போர் ஒத்திகை நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கத்தில் நேற்று நடத்தப்பட்டது. இந்த நிலையில் மணலி பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஆகிய இடங்களில் இன்று இரண்டாவது நாளாக போர் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடைபெற்றது.


இந்த பயிற்சியின் போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எவ்விதமான அவசரக்கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போர் பாதுகாப்பு ஒத்திகையில் எதிரிகள் தாக்குதல் நடத்தினால், பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் , பொதுமக்களை ராணுவ வீரர்கள் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ,  குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தினால் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது போன்ற ஒத்திகைகள் நடைபெற்றது. மாநில அவசர கால செயல்பாட்டு மையம் இந்த ஒத்திகை பயிற்சியினை ஒருங்கிணைக்கும் மற்றும் இதில் மாவட்ட அதிகாரிகள், மாநில அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர், சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கம், தேசிய சாரணர் இயக்கம், தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் பங்கேற்று உள்ளனர்.