நாகை அருகே பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி எரித்துக் கொலை?
நாகை அருகே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி 13 வயது சிறுமி உடல் எரிந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேளாங்கண்ணி போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒன்பதாம் வகுப்பு பயிலும் சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை 174 பிரிவில் வழக்குப்பதிவு செய்த வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் விசித்ரா மேரி முறையாக தொடர்விசாரணை செய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில் அவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுமி கொலை வழக்கில் முறையான விசாரணையை மேற்கொள்ளாத வேளாங்கண்ணி பெண் காவல் ஆய்வாளர் விசித்ரா மேரி தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் முறையான விசாரணையை மேற்கொள்ள மாவட்ட காவல்துறை சார்பில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நாகை அருகே 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.