தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள்ளோம் : உச்ச நீதிமன்றம்..!

 
1

கடந்த 2006-11 ஆண்டுகளில் அமைச்சராக இருந்தப்போது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவியை இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது. அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் தண்டனையை நிறுத்தி வைத்தது.

இதனையடுத்து பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் பொன்முடிக்கு மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் அனுப்பினார். இதனையடுத்து, பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என் ரவிக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும்? ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும். பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூறினால் அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று ஆளுநர் கூற முடியும்? ஆளுநர் அரசியல் சாசனத்தை பின்பற்றாவிடில் மாநில அரசு என்ன செய்யும்.

ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினால், ஜனநாயக முறைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அந்த நபர் குறித்து உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனப்படியே நாம் செயல்பட வேண்டும். தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து நாங்கள் தீவிர கவலை கொண்டுள்ளோம். ஆளுநர் ரவி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியுள்ளார். ஆளுநர் ரவிக்கு நாளை வரை கெடு இல்லையென்றால்.. நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை. அரசியலமைப்பின்படி செயல்பட ஆளுநரை வழிநடத்தும் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுவோம். நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம்

ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கு தெரியாதா? அவரிடம் சொல்லுங்கள்… நாங்கள் இதை மிகவும் தீவிரமாக பார்க்கிறோம். உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும்? அவருக்கு அறிவுரை கூறியவர்கள் சரியாக அறிவுரை கூறவில்லை. ஒரு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டால், அங்கு தண்டனை இல்லை என்பதுதான் பொருள். தண்டனையே அங்கு இல்லாத போது கறைபடிந்தவர் என்று சொல்ல முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.