மின் கட்டண உயர்விலிருந்து மக்களை ஓரளவாவது பாதுகாக்க வேண்டும்!!

 
ops

அனைத்துத் தரப்பு மக்களையும் மின் கட்டண உயர்விலிருந்து ஓரளவாவது பாதுகாக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒரு முறை மின் கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6,000 ரூபாய் அளவுக்கு மின் கட்டணம் குறையும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதற்கு முற்றிலும் முரணாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 12,000 ரூபாய் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசு, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் என நிர்ணயம் செய்தது. இதன் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் மிகப் பெரிய நிதிச் சுமைக்கு ஆளாகியுள்ளனர். இது தவிர, வணிகம், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வினை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நான் அறிக்கை விடுத்திருந்தேன்.

Ops

இந்தச் சூழ்நிலையில், குடியிருப்பு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை சில நிபந்தனைகளுடன் குறைத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. அதாவது, பத்து வீடுகளுக்கும் குறைவாக, மூன்று மாடிகளுக்கும் மிகாத மின்தூக்கி வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாயிலிருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் பயனடைபவர்கள் மிகக் குறைவு. பொதுப் பயன்பாடு என்பது அடுக்குமாடி குடியிருப்புக்குள் உள்ள பொதுவழியில் பயன்படுத்தப்படும் மின் விளக்குகள், தண்ணீரை கீழிருந்து மேலே உள்ள தொட்டிக்கு எடுத்துச் செல்லும் மின் மோட்டார்கள், மின்தூக்கி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பொதுப் பயன்பாடு என்று வரையறுக்கப்பட்டிருந்தாலும், மின் விளக்குகள், மின் மோட்டார்கள், மின் தூக்கிகள் போன்றவை குடியிருப்புகளுக்கு தேவையான அத்தியாவசியம் என்பதைக் கருத்தில் கொண்டும், இதில் வணிக நோக்கம் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டும், குடியிருப்புகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணம் பொதுப் பயன்பாட்டிற்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு முன்பெல்லாம்கூட மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், குடியிருப்புகளுக்கு ஒருவிதமான மின் கட்டண உயர்வு, குடியிருப்பு பொதுப் பயன்பாட்டிற்கு ஒருவிதமான மின் கட்டண உயர்வு என இரு கட்டண விகிதங்கள் இதுவரை நிர்ணயிக்கப்பட்டதில்லை. ஆனால், முதன் முறையாக குடியிருப்புகளுக்குள்ளேயே இருவிதமான மின் கட்டண உயர்வை அறிவித்த பெருமை தி.மு.க. அரசையே சாரும். இந்த இருவிதமான மின் கட்டண உயர்விற்கு மக்களிடையே எதிர்ப்பு அதிகரித்த நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலை சந்திக்க வேண்டுமே என்ற அச்சத்தில், குடியிருப்பு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை 8 ரூபாயிலிருந்து 5.50 ரூபாயாக சில நிபந்தனைளுடன் தி.மு.க. அரசு குறைத்து இருக்கிறது. இந்தக் கட்டண குறைப்பு பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ops

இந்த அறிவிப்பின் மூலம் பெரும்பாலானோருக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதுதான் யதார்த்தம்.'குடியிருப்பு பயன்பாடு' என்பதும் 'குடியிருப்பு பொதுப் பயன்பாடு' என்பதும் ஒன்று என்றிருக்கின்ற நிலையில், இருவிதமான மின் கட்டணங்களை நிர்ணயிப்பது என்பது இயற்கை நியதிக்கு முரணானதாகும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் நகர்ப்புறமயமாக்கல் அதிகமாகிக் கொண்டே வருகின்ற சூழ்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும், பிற நகர்ப்புற பகுதிகளிலும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகப் பெரிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளைத்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், குடியிருப்பு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை சில நிபந்தனைகளுடன் குறைத்திருப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்பதோடு மட்டுமல்லாமல், பெரும்பாலானோரை கடுமையாக பாதிக்கக்கூடிய செயல். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, எவ்வித நிபந்தனைகளுமின்றி, குடியிருப்பு பயன்பாட்டிற்கான மின் கட்டணத்திற்கு இணையாக குடியிருப்பு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை குறைத்து, அனைத்துத் தரப்பு மக்களையும் மின் கட்டண உயர்விலிருந்து ஓரளவாவது பாதுகாக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.