அரசியல் இருக்காது என நம்பினோம்..!! முருக பக்தர்கள் மாநாட்டை கண்டிக்கிறோம் - ஆர்.பி.உதயகுமார்..
முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது என்கிற நம்பிக்கையில் பங்கேற்றோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் கடந்த ஞாயிறு அன்று இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பெரியார், அண்ணா குறித்து விமர்சனங்கள் அடங்கிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக ‘அண்ணா’ பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அண்ணாவைக் கேவலப்படுத்துவதை ரசிக்கிறார்கள் என்றால், அவர்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார். மேலும், அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள் என்றும், இன்றைக்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார்கள். என்று கூறியிருந்தார்.

இதேபோல் பலரும் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவினர் பங்கேற்றது வெட்கக்கேடான செயல் என்று விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது என்கிற நம்பிக்கையில் பங்கேற்றோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்; முருக பக்தர்கள் என்ற அடிப்படையில் அதில் பங்கேற்று இருந்தோம். அதில் அரசியல் இருக்காது என்கிற நம்பிக்கையோடு பங்கேற்றிருந்தோம். ஆனால் அதிலே ஒளிபரப்பப்பட்ட அந்த வீடியோவில்ல் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பப்பட்டதாக பரபரப்பான செய்திகள் வெளியாகி அதிமுக மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.
அதிமுக ஒரு போதும் கொள்கை, கோட்பாடு, லட்சியங்களை விட்டுக் கொடுக்காது. அண்ணா ஜெயலலிதாவை அவதூறாக பேசியவர்களுக்காக எடப்பாடி என்ன முடிவு எடுத்தார் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை. மாநாட்டில் நாங்கள் பின் வரிசையில் இருந்ததால் பெரியார் அண்ணா குறித்த விமர்சன வீடியோவை பார்க்கவில்லை. முருகன் மாநாட்டில் பெரியார் அண்ணா குறித்து விமர்சன வீடியோ ஒளிபரப்பப்பட்டதை அதிமுக கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


