"காவிரி நீரை பெற்று குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும்" - ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

 
GK Vasan

தமிழக அரசு, கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்துக்கு பெற வேண்டிய ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீரை பெற்று, தமிழக விவசாயிகள் பக்கம் நின்று, குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும் என்று  ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுக்குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு கர்நாடக அரசிடம் பெற வேண்டிய காவிரி நீர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு உதவிட வேண்டும்.காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

gk

மேலும் மேட்டூர் அணையில் இருந்து சுமார் 15 க்கும் மேற்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், விவசாயப் பயன்பாட்டுக்கும் காவிரி நீர் பயன்பட்டு வருகிறது. கர்நாடக அரசு தற்போது காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது எனஅம்மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத் துறை அமைச்சருமான சிவகுமார் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி தெரிவித்து வருகிறார். தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்துக்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை முறையாக பங்கீட்டின்படி கர்நாடகா திறந்துவிடவில்லை.

இந்நிலையில் மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மை பணி என்றும் கூறியுள்ளார். மேலும் மேகதாது அணைக்கு நிலம்கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இப்படி கர்நாடக முதலமைச்சர் தெரிவித்த பிறகும் கூட, தமிழக அரசு அவசர, அவசிய நடவடிக்கைகள் எடுக்காதது வேதனைக்குரியது.

gk vasan

குறிப்பாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்துக்கு திறக்க வேண்டிய காவிரி நீர் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி கேள்விக்குறியே. மேலும் கர்நாடக துணை முதலமைச்சர், முதலமைச்சர் ஆகியோர் காவிரி நீர் விவகாரத்தில், மேகதாது அணைப் பிரச்சனையில், தமிழகத்துக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்ற வேளையில் தமிழக தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் யார் பக்கம். கர்நாடக காங்கிரஸ் பக்கமா அல்லது தமிழக விவசாயிகள் பக்கமா. அதாவது கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும். எனவே காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவின் அத்துமீறிய பேச்சை, செயலை த.மா.கா சார்பில் கண்டித்து, ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.