அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் - வானிலை மையம்..
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு இயல்பைவிட வெயில் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பில், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது என்றும், தென்தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2 செ.மீட்டர் மழையும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 41.0 ° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் (18.09.2024 மற்றும் 19.09.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.09.2024 முதல் 24.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (18.09.2024 மற்றும் 19.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையில், 18.09.2024 முதல் 22.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ” என்று தெரிவிக்கபட்டுள்ளது.