"இந்தித் திணிப்பை பிரசார் பாரதி நிறுவனம் கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது" - ராமதாஸ்

 
pmk

 இந்தித் திணிப்பு முயற்சிகளில் பிரசார் பாரதி நிறுவனம் ஈடுபடக்கூடாது என்று ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார். 

TN

காரைக்கால் வானொலி நிலையத்தின் பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் நிகழ்ச்சிகளின் நேரத்தை குறைத்து விட்டு, தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அறிக்கை வெளியிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதில், பிரசார் பாரதி நிறுவனத்தின் இந்த அப்பட்டமான இந்தித் திணிப்பு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். காரைக்கால் வானொலியில் தினமும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதற்காக வானொலி நிலைய அதிகாரிகள் முன்வைக்கும் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நிகழ்ச்சி வடிவமைப்பை கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக வானொலி நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். மொழி, கலாச்சாரம், தொழில் முறை ஆகியவற்றில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரே மாதிரியான வானொலி நிகழ்ச்சிகளை கொண்டு வருவதே வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் தத்துவத்திற்கு எதிரான செயல் ஆகும். இதை உணர்ந்து கொண்டு காரைக்கால் வானொலியில் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை நிறுத்தி விட்டு, வழக்கம் போல தமிழ் நிகழ்ச்சிகளையே ஒலிபரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று  தனது ட்விட்டர் பக்கத்தில், அகில இந்திய வானொலியின் காரைக்கால் நிலையத்திலிருந்து கடந்த  2-ஆம் தேதி முதல் தினமும் 4 மணி நேரம் ஒலிபரப்பப்பட்டு வந்த இந்தி நிகழ்ச்சிகள் நேற்றிரவு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.  இந்தித் திணிப்பை பிரசார் பாரதி நிறுவனம் கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது!காரைக்கால் வானொலி மூலமான இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இது கைவிடப்படாவிட்டால் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து இந்தி நிகழ்ச்சிகள்  திரும்பப்பெறப்பட்டுள்ளன. இது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது! வானொலி நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். இதை உணர்ந்து இனி வரும் காலங்களில் இந்தித் திணிப்பு முயற்சிகளில் பிரசார் பாரதி நிறுவனம் ஈடுபடக்கூடாது! என்று குறிப்பிட்டுள்ளார்.