“அன்புமணி சொன்னது அப்பட்டமான பொய்..” ‘போகப் போகத் தெரியும்..’ - பாடலில் பதில் சொன்ன ராமதாஸ்..!!
பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுகவே காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே அண்மைக்காலமாக மோதல்போக்கு இருந்து வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் பலக்கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இதற்கிடையில், ராமதாஸ், தமிழகம் முழுவதும் ஒங்காக செயல்படாத மற்றும் பாமகவில் அன்புமணியின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை அடுத்தடுத்த நியமனம் செய்து வருகிறார். அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதே பொறுப்பில் நியமனம் செய்து அன்புமணி கடிதம் வழங்கி வருகிறார். அடுத்தடுத்து நிர்வாகிகள் நீக்கம் மற்றும் நியமனம் காரணமாக பாமகவில் நிகழும் மாற்றங்களும், மோதல்களும் பெரும் பேசுபொருளாகியுள்ளன.

இதனிடையே இன்று சேலம் மற்றும் தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக எம்.எல்.ஏக்களை நலம் விசாரிப்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு திமுக காரணம் என அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எம்எல்ஏக்களை சந்தித்தேன். அவர்கள் நலமாக இருக்கிறார்கள்” என்றார்.
மேலும் அன்புமணி மாவட்டங்கள் தோறும் கூட்டம் நடத்துகிறாரே என்ற கேள்விக்கு, அவர் வேலையை அவர் பார்க்கிறார்” என்றார். அப்போது அன்புமணி மேடையில் கேட்ட மன்னிப்பை நேரில் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? அவர் மன்னிப்புக் கேட்டதால் குழப்பம் தீருமா? என செய்தியாளர் கேட்டதற்கு “போகப் போக தெரியும்” என பாடலை பாடினார்.


