கோவையில் நேற்றிரவு நடந்தது என்ன ? இளம் பெண் கடத்தப்பட்டாரா? – கோவை கமிஷனர் விளக்கம்..!

 
1 1

கோவை இருகூர் பகுதியில் பெண் ஒருவர் நேற்றிரவு 8 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக காரில் வந்தவர்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக ஏற்றி சென்றதாகவும், அப்போது அந்த பெண் கத்தி கூச்சலிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவசர தொலைபேசி எண் 100க்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதி முழுவதும் சந்தேகத்திற்கிடமான காரை தேடினர். ஆனால் கார் சிக்கவில்லை. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அதில் வெள்ளை நிற கார் ஒன்று நின்று கொண்டு இருப்பதும், பெண் ஒருவர் சப்தம் எழுப்புவதும் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் கோவை மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், “கோவை, சிங்காநல்லூர் அருகே இருகூர் பகுதியில் நேற்று இரவு காரில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாக அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண் மூலம் தகவல் அறிந்து ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சிங்காநல்லூர் காவல் துறையினர் சூலூர் முதல் ஏ.ஜி புதூர் வரை உள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பெண் கடத்தப்பட்டதாக கூறப்படும் கார் விபரம் பதிவாகி உள்ளதா ? என ஆய்வு மேற்கொண்டதில் ஏ.ஜி புதூரில் ஒரு பேக்கரி கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் குறிப்பிட்ட அந்த வெள்ளை நிற கார் பதிவாகி இருந்தது.

ஆனால் அந்த வெள்ளை நிற காரின் பதிவு எண் கண்காணிப்பு கேமராவில் சரியாக பதிவாகவில்லை. இருப்பினும் நவீன உதவியுடன் அந்த காரின் பதிவு எண்ணை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம். மற்ற கண்காணிப்பு கேமரா பதிவுகள் இருக்கிறதா ? என்றும் ஆய்வு செய்து வருகிறோம். ஆனால் இதுவரை பெண் கடத்தல் சம்பவம் தொடர்பாக எந்த புகார்களும் போலீசாருக்கு வரவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.